விஜய் நேரில் பாராட்டியதன் மூலம் இன்னும் நல்ல படங்களைத் தருவதற்கான ஊக்கம் கிடைத்தது என்று நிவின் பாலி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாள படம் 'ப்ரேமம்'. மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. தெலுங்கில் இப்படம் தற்போது ரீமேக்காகி வருகிறது.

 

இப்படக்குழுவினருக்கு பல்வேறு தமிழ் திரையுலகினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 

இந்நிலையில் நடிகர் விஜய்யும், 'ப்ரேமம்' நாயகனான நிவின் பாலிக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

 

விஜய் உடனான சந்திப்பு குறித்து நிவின் பாலி தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடும்போது "விஜய் சார் என்னை அவரது அலுவலகத்துக்கு அழைத்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அவர் 'ப்ரேமம்' படத்தை மிகவும் நேசித்தார். மேலும் உண்மையாக பாராட்டுகளைத் தெரிவித்தார். அவரைச் சுற்றியுள்ள நட்சத்திர அந்தஸ்து என்ற ஒளிவட்டம் எதுவுமில்லாமல் வெகு சாதாரண மனிதரைப் போல 'ப்ரேமம்' படம் தனக்குப் பிடித்திருப்பதை உளப்பூர்வமாக பாராட்டிப் பேசினார்.

 

சினிமாவைப் பற்றியும் கேரளாவை அவர் நேசிப்பது குறித்தும் நாங்கள் உரையாடிய அந்த நேரம் மிக மிக உன்னதமானது. ஒரு மறக்கமுடியாத நாள். அவரிடமிருந்து எனக்குப் பாராட்டுக்கள் கிடைப்பது என்பது உயர்ந்த இடத்தில் அவருடைய தகுதிக்கு விலை மதிப்பில்லாததும், மேலும் நல்ல படங்களைத் தருவதற்கான கூடுதலான ஊக்கம் அவரிடமிருந்து கிடைத்துள்ளது.

 

அவருடைய நேர்மையும் எளிய வாழ்க்கையும் நமக்கு ஒரு பரிசு என்றுதான் சொல்லவேண்டும். மிக்க நன்றி சார். 'தெறி' யை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி