டெக்னாலஜியை வச்சித்தான் இந்தப் படம் செய்கிறேன். செல்போனை இப்போ ஒருத்தர் கையில இருந்து வாங்கி வச்சிக்கிட்டீங்கன்னு வைங்க... அவங்க படுற கஷ்டம் அப்படியே அப்பட்டமாத் தெரியும். இப்போ யாருக்கும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல் போன் எதுவும் வரலைன்னா பதற்றமா இருக்கு.

 

செல்போன் இல்லாம ஒருநாள் இருக்குறது கூட இப்ப சாத்தியமே இல்லை. யோசிச்சுப் பார்த்தால் அந்த சிறு கருவிதான் நம்ம எல்லாரையும் கட்டுப்படுத்திக்கிட்டிருக்குற மாதிரி தெரியுது. இதில் இருக்குற வேடிக்கையை எல்லாம் ஒண்ணா சேகரிச்சு அழகா செய்கிற படம்தான், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’. இந்த வார்த்தைகளைக் கேட்காமல் நாம் தப்பியதில்லை என்பதால், இந்தப் பெயரை சுவாரஸ்யத்திற்காக வச்சோம்’’ - அருமையாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா.

 

‘‘ ‘அட்டக்கத்தி’ தினேஷ், நகுல் இரண்டு பேரை மேனேஜ் பண்ணி படம் எடுத்திருக்கீங்க?’’

 

‘‘தினேஷ் ஃபிளாட் வாங்கி விற்பவராக வருவார். நகுல் சும்மா ஆட்டமும் பாட்டமாக திரிகிற பையன். தலைப்பைப் பார்த்து, ஏதோ டெக்னிக்கல் டீடெயில் உள்ள படம்னு நினைச்சிடக்கூடாது. காதல், காமெடி, சென்டிமென்ட் தாராளமா இருக்கிற படத்தில் இது ஒரு அம்சமா வருது... அவ்வளவுதான். எதையோ தேடுறப்போ யதேச்சையா குடும்ப ஆல்பம் கண்ணுல படும் பாருங்க... ‘அட’ன்னு எல்லாத்தையும் மறந்திட்டு, நிம்மதியா அதைப் புரட்டிப் பார்ப்போம்.

 

கலவையா, காமெடியா, உணர்வுகள் கலந்து கட்டி நிற்குமே... அதுதான் இந்தப் படம். மனுஷன் சம்பாதிக்கிறது, படிச்சுத் தெரிஞ்சுக்கிறது எல்லாமே சந்தோஷத்துக்குத்தான். காதலும் கூட சந்தோஷத்துக்குத்தான். காதலியோட காலடி மண் தொடங்கி கண்ணிமை ரோமம் வரைக்கும் சேர்த்து வச்சு மருகினவங்கதானே நாமெல்லாம்?

 

படம் பார்த்துட்டு வெளியே வரும்போது ஜாலியா சிரிச்சிட்டுப் போகத் தோணும். வழியில் பார்க்கிற குழந்தையைத் தூக்கி கொஞ்சத் தோணும். எதிர்படுகிற எல்லோருக்கும் ஒரு சின்ன புன்னகையாவது பரிசா தருவீங்க. அப்படி, ஜாலியா, கேலியா, அன்பையும், காதலையும் சொல்லியிருக்கேன்!’’

 

‘‘இரண்டு ஹீரோக்களை டீல் பண்ணினது கஷ்டமா இல்லையா?’’

 

‘‘இருந்தால், நீங்க ஆரம்பிக்கும்போதே சொல்லியிருப்பேனே! தினேஷ் ரொம்ப நேரடியானவர். கதையைக் கேட்டதும் அவரோட பகுதி அவருக்குப் பிடிச்சுப் போச்சு. நானாத்தான் ஆரம்பத்திலேயே ‘இன்னொரு ஹீரோவுக்கு இதில் வேலையிருக்கு’ன்னு சொன்னேன். ‘அதை நீங்க பார்த்துக்கங்க’ன்னு சொல்லிட்டார்.

 

நகுலும் அது மாதிரித்தான். இப்ப இருக்கிற ஹீரோக்கள் எல்லாம் வேற மாதிரி. ‘அடுத்தவங்களுக்கு சீன் எப்படி? நம்மைவிட அதிகமா... குறைவா’ன்னு நினைச்சுப் பார்க்கிறதில்லை. அவங்க போர்ஷன் எப்படி வருதுன்னு மட்டும் கவனமா இருந்துக்கிட்டு, பொறுப்பை நமக்கிட்டே விட்டுடுறாங்க. இது கூட நல்லதுதான். இரண்டு பேருக்கும் நாம நியாயம் செய்ய முடியுது!’’

 

‘‘பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தான்னு எப்படி ஜோடி போட்டிருக்காங்க?’’

 

‘‘பிந்து மாதவிதான் எங்கே பார்த்தாலும் நம்ம படத்தைப் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. ‘இந்தப் படத்திற்கு வெயிட் பண்றேன்... நல்லா வந்திருக்கு’ன்னு ஷூட்டிங் போற இடத்தில் எல்லாம் சொல்றாங்க. ‘என்னங்க... அவங்களுக்கு அப்படி ஒரு ரோல் கொடுத்திருக்கீங்க’ன்னு எல்லோரும் கேட்கிறாங்க. நிஜமாகவே நல்ல நடிப்பு. இந்தப் படத்திற்கு பின்னாடி இன்னும் ஒரு மைலேஜ் அவங்களுக்கு கட்டாயம் உண்டு. நகுலுக்கு ஐஸ்வர்யான்னு ஒரு புதுமுகம். இரண்டு பேரும் வர்ற சீனெல்லாம் உற்சாகம் தெறிக்கும்!’’

 

‘‘பாடல்கள் தமன்... எப்படி வந்திருக்கு?’’

 

‘‘அவருக்கும் எனக்கும் அமைஞ்ச நல்ல அலைவரிசை, பாட்டுப் பயணத்திற்கான உற்சாக உரம். அதனால், இதமும் பதமுமா மூன்று பாடல்களை நல்லா தர முடிஞ்சது. எவ்வளவு பாடல்கள் அவசியமோ, அவ்வளவு போதும்னு தமன் சொல்வார். எழுந்தா, உக்கார்ந்தா பாட்டு வைக்கறதில் அவருக்கு எந்த இஷ்டமும் கிடையாது. லவ் ஸ்டோரின்னு சொன்னதும் ஏதோ படு சீரியஸா இருக்கப் போகுதுன்னு நினைக்கக் கூடாது.

 

இவ்வளவு ஜாலியான, ஃபீலிங்கான ஒரு காதலை எல்லோருக்கும் பிடிக்கும். இப்ப இருக்கிற இளைஞனின் சரியான பிரதிநிதிகள்தான் தினேஷ், நகுல். இம்சிக்கிற காதல், சின்னதா மோதல்... கண்ணுல ஃபுல் ஏ.சி, காதுல அலைபேசின்னு திரிகிற பொண்ணுங்க. பிராக்டிக்கலும், ஃபீலிங்கும் 20-20 இருக்கிற இன்னிக்குப் பசங்களின் காதல் வெளிவந்திருக்கு. முழுக்க முழுக்க கலாட்டா கஸாட்டா. இந்த ஒன்லைனை ஓகே பண்ணி, இப்படி ஒரு படம் உருவாகக் காரணமா இருந்த தயாரிப்பாளர் சந்திரனுக்கு நன்றி சொல்வதும் என் கடமை!’’
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி