ரஜினிமுருகன்

Monday 18th of January 2016 04:29:37 PM

கதையின் கரு: தாத்தாவின் பரம்பரை சொத்தை காப்பாற்றும் பேரன்.

"மதுரை என்றாலே அரிவாள், கத்தி, வெட்டு, குத்து மட்டுமல்ல. மல்லிப்பூ மணக்கிற மாதிரி அது ஒரு கோவில் நகரம்...திருவிழா நகரம்'' என்ற வசனத்துடன் தொடங்குகிற மதுரை பின்னணி படம்.

மதுரை சுற்றுவட்டாரத்தில் நிறைய சொத்துக்களுக்கு சொந்தக்காரர், ராஜ்கிரண். இவருடைய மகன், மகள்கள் எல்லோரும் படித்து வெளிநாட்டில் உத்தியோகம் பார்க்கிறார்கள். ஒரு பேரன் சிவகார்த்திகேயன் மட்டும் மதுரையில் வெட்டியாய் ஊர் சுற்றுகிறார். கூடவே பக்கவாத்தியமாக நண்பர் சூரி. சிவகார்த்திகேயனுக்கும், கீர்த்தி சுரேசுக்கும் சின்ன வயதிலேயே முடிச்சு போடப்படுகிறது. வெட்டியான சிவகார்த்திகேயனை கீர்த்தி சுரேசின் தந்தை வெறுக்கிறார். அவர் வீட்டுக்கு எதிரிலேயே டீக்கடை போடுகிறார், சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் ராஜ்கிரண் தனது வீட்டை விற்று மகன், மகள்கள், பேரன்களுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்க நினைக்கிறார். அதற்கு வில்லங்கமாக குறுக்கே வருகிறார், ரவுடி சமுத்திரக்கனி. "நானும் ஒரு பேரன்தான். எனக்கும் வீட்டில் பங்கு வேண்டும்'' என்று சூழ்ச்சி ஆதாரங்களை காட்டுகிறார். பஞ்சாயத்து நடக்கிறது.

அதில், ராஜ்கிரண்-சிவகார்த்திகேயன் குடும்பத்துக்கு நீதி கிடைத்ததா, இல்லையா? சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் காதல் என்ன ஆகிறது? என்பது 'கிளைமாக்ஸ்.'
சிவகார்த்திகேயன், சூரியுடன் வெட்டியாக ஊர் சுற்றுகிற நகைச்சுவை நாயகன். அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி கச்சிதமாய் பொருந்துகிறது, கதாபாத்திரம். "ஏஹே...'' என்று மதுரை தமிழில் கீர்த்தி சுரேசை உரசும் காட்சிகளில், சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

கீர்த்தி சுரேஷ், வசீகர முகம். பாடல் காட்சிகளில், 'கிக்' ஆக கண்ணடிக்கிறார். மின்னலாக இடுப்பை அசைக்கிறார். சூரியின் 'டைம் காமெடி'யும், வசன உச்சரிப்புகளும் ஆரவாரத்தை அள்ளுகின்றன. தாத்தா கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், "என்னை அம்போன்னு விட்டுட்டு எல்லோரும் வெளிநாட்டுக்கு போயிட்டீங்க...'' என்று உருகும்போது, நெகிழவைக்கிறார். மதுரை ரவுடி மூக்கனாக சமுத்திரக்கனி, மிரட்டுகிறார்.

சிவகார்த்திகேயனும், சூரியும் சேர்ந்து பாத ஜோதிடம் பார்ப்பதும், "இன்னும் அறுபது நாளில் இரண்டு பேரும் ஆடி காரில் போவீர்கள். ஊரே கூடி உங்களை வேடிக்கை பார்க்கும்'' என்று ஜோதிடர் சொன்னதை கேட்டு, ஷோரூமுக்குப் போய் கார் வாங்க முயற்சிப்பதும், கலகலப்பான ஆரம்பம்.

காதலியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு எதிரிலேயே டீக்கடை போடுவது, அந்த டீக்கடை வாழைப்பழ 'காமெடி'யில் சேதாரமாவது என காதலும், நகைச்சுவையுமாக பயணிக்கும் கதைக்குள் இடையிடையே ரவுடி சமுத்திரக்கனி வருவது, பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

சிவகார்த்திகேயனும், சூரியும் குடித்து விட்டு கீர்த்தி சுரேஷ் வீட்டு முன்பு கலாட்டா செய்வது, வெளிநாட்டு பேத்தி பெரிய மனுஷி ஆவது, இரண்டு பஞ்சாயத்துகள் கூட்டப்படுவது, கடைசியாக ராஜ்கிரணும், சிவகார்த்திகேயனும் சேர்ந்து சமுத்திரக்கனி கும்பலுடன் மோதுவது-கதையை வளர்ப்பதற்காக திணிக்கப்பட்ட காட்சிகள். வசன விளையாட்டு அநேக இடங்களில் ரசிக்க வைக்கிறது.

டி.இமான், ஜாலி மூடில் மெட்டு போட்டு இருப்பார் போலும். பாடல்கள் அத்தனையும் 'சூப்பர் ஹிட்' ரகம். மதுரை சுற்றுவட்டார பசுமையும், கலர் கலராக உடையணிந்தபடி கூட்டம் கூட்டமாக ஆடும் பாடல் காட்சிகளும் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் பெயர் சொல்கின்றன.

வேலையில்லாத ஒரு இளைஞர், அவரின் மென்மையான காதல், கூடவே ரகளை செய்யும் நண்பர், பாசமும், பாரம்பரியமும் மிகுந்த தாத்தா, அவருடைய வீட்டில் பங்கு கேட்கும் அடாவடி ரவுடி என கலகலப்பும், விறுவிறுப்புமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் பொன்ராம்.
திகட்டாத சர்க்கரை பொங்கல்.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி